India

ஒரே நாளில் 3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பளிக்கவிருக்கும் ரஞ்சன் கோகாய்... இந்தியா முழுக்க எதிர்பார்ப்பு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி பணி ஓய்வு பெறவிருக்கும் நிலையில், நாளை மூன்று முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.

ரஃபேல் போர் விமானம் கொள்முதல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு முறைகேட்டில் ஈடுபடவில்லை என அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது.

இதேபோல், ரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை திரித்துக் கூறியதாக ராகுல் காந்தி மீது பா.ஜ.க எம்.பி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு தீர்ப்பளிக்க இருக்கிறது.

அதேபோல், கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதியளிப்பதற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனு மீதும் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்க உள்ளது.

சமீபத்தில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், பெரும்பான்மையான இந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சபரிமலை விவகாரத்திலும் இதுபோன்றதோரு தீர்ப்பு அளிக்கப்படுமா என விவாதங்கள் கிளம்பியுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் நான்கு நாட்களில் பணி ஓய்வு பெறவிருக்கும் நிலையில், நாளை மூன்று முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கவிருப்பதால், அவை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.