India

“உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை; இது யாருடைய வெற்றி தோல்வியும் அல்ல”: சன்னி வக்ஃப் வாரியம்!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட முழு உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும், 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளை அமைத்து கோயில் கட்டுவதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சன்னி வஃக்பு வாரியத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஷாபர்யாப் ஜிலானி, “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை. வெளியான தீர்ப்பு குறித்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

அந்த ஐந்து ஏக்கர் நிலம் எங்களுக்கு பயனற்றது. மேலும், தீர்ப்பை காரணமாக வைத்து யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடவேண்டாம். தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் கருதக் கூடாது” என்று தெரிவித்தார்.