India

“பணமதிப்பிழப்பால் வியாபாரத்தில் வருமானம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது” : வியாபாரிகள் வேதனை!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. மோடி அரசின் இத்தகைய அறிவிப்பின்போது, சரிந்த சிறுகுறு தொழில்கள் தற்போதுவரை எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், சிறு கடைகளின் மூலம் அன்றாட வாழ்க்கை நடத்திவருபவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்தாகக் கூறுகின்றனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதுமே பல தொழிலாளர்கள் தங்களின் வேதனைகளைக் கொட்டுகின்றனர்.

சென்னையின் முக்கிய பகுதியில் சிறு கடை ஒன்றை நடத்தி வருபவர் சண்முகம் என்பவர் கூறுகையில், “ஓரளவு பரபபரப்பான நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பேன். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு கூட்டம் வந்தாலும் 10 ஆயிரத்திற்கு மேல் வியாபாரம் நடத்தமுடியவில்லை.

இதனால் எனக்கு கிடைத்துவந்த லாபம் குறைந்தது. அதனால் 5 பேர் இருந்த இடத்தில் 2 பேரை மட்டுமே வேலைக்கு வைத்துள்ளேன். என்னிடம் இருந்து சென்றவர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்குதான் வேறு இடத்தில் வேலை பார்க்கிறார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பூக்கடை நடத்திவரும் வயதான பெண்மணி ஒருவர் கூறுகையில், “எந்த படிப்பறிவும் இல்லாததால்தான் தினமும் அலைந்துதிரிந்து பூ வாங்கி விற்று வருகிறேன். திடீரென அறிவித்ததால் என்னிடம் இருந்த சேமிப்பு பணத்தில் மாற்ற முடிந்தது போக, 3 ஆயிரத்தை மாற்றமுடியாமல் போனது.

அந்த 3,000 ரூபாய் என்பது எனது ஒருவார உழைப்பு. எல்லாம் வீண் தான். சிறிது நாட்களில் சரியாகும் என்று சொன்னார்கள். ஆனால் தற்போது என் குடும்பச்செலவுக்கு பணம் சேர்ப்பதே சிக்கலாகிவிட்டது. என்னுடைய பிழைப்பே மோசமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்திய அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இங்குள்ள சிறு - குறு வியாபாரிகள் பலரின் வாழ்க்கையும் முற்றிலுமாக சிதைந்துபோய்விட்டது என்பதில் வேறுகருத்து இருக்கமுடியாது.

படிப்பு இல்லை என்றாலும் ஏதாவது மளிகை கடை, சிறுதொழில் செய்து வாழ்கையை நடத்திவிடலாம் என்று என்று நினைத்த ஏழை மக்கள், இன்று அந்த நம்பிக்கை இல்லாமல் விரக்தியில் வாழ்கிறார்கள். அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு முக்கிய காரணம்.

அதுமட்டுமல்லாமல், ரொக்க பணப்பரிமாற்றத்தை திடீரென முடக்கிவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அவர்களை தள்ளினால் அவர்களால் அதை புரிந்துகொள்ளமுடியுமா? இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திடீரென தடை செய்தார்கள்.

இவர்களின் அறிப்பால் லட்சக் கணக்கான வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி கட்டுவதற்காக தற்போது உழைத்துவௌகிறார்கள். இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அவர்களின் மீது ஜி.எஸ்.டியை திணித்துவிட்டார்கள்.” என காட்டமாக தெரிவித்தார்.

இந்த பிரச்னைகளில் இருந்து மீளமுடியுமா என பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் ஆங்கில நாளிதல் ஒன்று பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “சிறு வியாபாரிகள் இந்தச் சூழலில் மீள்வது என்பது கடினம். அவர்கள் மீள்வதற்கு காலக்கொடு எதுவும் உறுதியாக சொல்லமுடியாது.

பணமதிப்பிழப்பின் போது கடுமையான வீழ்ச்சியை இந்திய பொருளாதாரம் சந்தித்தது. அந்தக் காலகட்டத்தில் சிறு வியாபாரிகள் வாங்கிய கடன்களை அடைக்க அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் கடன் பெற்று வியாபாரம் செய்தனர்.

அதனை ஈடுகட்ட கஷ்டப்பட்ட காலத்தில் ஜிஎஸ்டி வரி மீண்டும் வருமானத்தை மோசமாக பாதித்துவிட்டது. இதனால் வங்கியில் பெற்ற கடனை கட்டுவதா? தங்களின் வாழ்வாதாரத்திற்கு சேர்ப்பதா என சிக்கலான நிலையில் இருக்கிறார்கள். இந்த சூழலில் இருந்து அவர்கள் மீள்வது சிரமம்தான்” என்கிறார் அவர்.