India

மணல் கடத்தலை தடுத்த தாசில்தார் மீது தாக்குதல்; பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி!

மத்திய பிரதேச மாநிலத்தில் ராய்பூரா நகரில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்ற டிராக்டரை அப்பகுதி தாசில்தார் மறித்து சிறைவைத்துள்ளார்.

அப்போது அங்குவந்த பவாய் சட்டப்பேரவைத் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ. பிரகலாத் லோதி மற்றும் பா.ஜ.க-வினர் டிராக்டரை மடக்கி பிடித்து விசாரித்த தாசில்தாரை கடுமையாக தாக்கினார்கள். இதில் பலத்தக்காயம் அடைந்த அரசு அதிகாரி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இதுதொடர்பாக தன்னை தாக்கிய பவாய் சட்டப்பேரவைத் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ. பிரகலாத் லோதி உட்பட 12 பேர் மீது தாசில்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார், பா.ஜ.க எம்.எல்.ஏ. பிரகலாத் லோதி மற்றும் பாஜக-வினர் 11 பேர் மீது வன்முறை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பா.ஜ.க எம்.எல்.ஏ. பிரகலாத் லோதி

மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி, எம்.எல்.ஏ. ஒருவருக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழக்க கூடும் என்று கடந்த 2013-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று போபால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் பிரகலாத் லோதி மற்றும் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, லோதியின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அவரை சட்டப்படி நீக்குவதற்கான பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.