India

2050-ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கப் போகிறதா சென்னை? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தை தடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், 2100-ம் ஆண்டு ஏற்படவிருக்கும் கடல் மட்ட உயர்வால் இந்தியாவில் 4 கோடியே 40 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை ஆசிய கண்டத்தில் உள்ள ஆறு நாடுகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, “இந்தியா, சீனா, வியட்நாம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய ஆறு ஆசிய நாடுகளில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நாடுகளைச் சேர்ந்த 23 கோடியே 70 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விடம் ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டுக்குள் மிகப்பெரிய வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஆசிய கண்டத்தின் மிகப் பெரும் நிலப்பரப்பு ஆபத்தான நிலையில் உள்ளது” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் சென்னை, மும்பை, குஜராத், கொச்சி போன்ற கடலோர மாவட்டங்களில் கடல் மட்டம் உயர்ந்து நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர்.

இதில் மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை நகரம் அமைந்திருப்பதாகவும் கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தை தடுத்தாகவேண்டும் என அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.