India

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைவசம் இல்லை : உள்ளாட்சி தேர்தல் நடத்த மீண்டும் அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மேலும் 4 வாரகாலம் அவகாசம் கோரி தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு இல்லை என்பதால் தேர்தலை இப்போது நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இதனால், தேர்தல் அறிவிப்பை வெளியிட மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் முதல் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.