India

“பாஜகவின் பசு காவல் ஏட்டளவில் தான் இருக்கிறது; செயலில் இல்லை”: சிறையிலிருந்து அம்பலப்படுத்தும் சிதம்பரம்!

பா.ஜ.க-வினர் பசுக் காவல் என்கிற பெயரில் வன்முறையைப் பிரயோகித்து மக்களை வதைத்து வருகின்றனர். இதை ஆளும் பா.ஜ,க அரசும், ஆட்சியாளர்களும் ஊக்குவித்து வருகின்றனர்.

போலவே, நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், உற்பத்தித் துறைகளின் வீழ்ச்சியாலும், வேலையின்மை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், பா.ஜ.க-வினர் அதையும் ஒப்புக்கொள்வதாக இல்லை.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற உத்தரவால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசின் தோல்விகள் குறித்து தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் ப.சிதம்பரத்தை திட்டமிட்டு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.க அரசு. சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்தின் சார்பில், அவரது குடும்பத்தினர் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

“நான் கேட்டவரையில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது வேலையின்மை நிலை மிகமோசமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையின்மை இன்னும் மோசமடையும் எனத் தெரிவிக்கின்றனர். இது, வேலையின்மை கடுமையாக இருப்பதைக் காட்டுகிறது.

பழங்குடி கால்நடைகளின் எண்ணிக்கை கடந்த 2012 முதல் 2019 வரை 6% குறைந்துள்ளது. பா.ஜ.க அரசின் பசுக்கள் மீதான அன்பு காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது. செயலில் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.