India

‘இந்தியாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஐ.ஏ.எஸ்’- திருவனந்தபுரம் சப்-கலெக்டராக பதவியேற்பு!

கேரள மாநில திருவனந்தபுரத்தின் துணை ஆட்சியராக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஐ.ஏ.எஸ் பிரஞ்சால் பாட்டீல் பொறுப்பேற்றுள்ளார்.

மகாராஷ்டிராவின் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பாட்டீல். இவர் தனது சிறு வயதிலேயே பார்வைத் திறனை இழந்தவர். இருப்பினும் திறமையான படிப்பாற்றலை கொண்டுள்ளதால் அவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் எனபதையே லட்சியமாக கொண்டுள்ளார்.

அதற்காக எவ்வித சஞ்ப்புக்கும் இடமளிக்காமல் தனது படிப்பை திறம்பட முடித்துள்ளார். மும்பை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலையை முடித்த இவர் டெல்லி ஜே.என்.யூவில் சர்வதேச தொடர்புத் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, தனது லட்சியத்துகான பாதையை அடைவதற்காக சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு தொழில்நுட்ப வசதியுடன் பாடங்களை படித்து வந்து பிரஞ்சால் 2016ல் நடந்த தேர்வில் நாடளவில் 773வது இடத்தை பிடித்தார். இந்திய ரயில்வேத்துறையில் கணக்கு பிரிவில் வேலை கிடைத்தும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால் வேலை மறுக்கப்பட்டுள்ளது.

இருந்தும், தன்னுடைய முயற்சிக்கு எந்த தடைக்கல்லும் இடாமல் தொடர்ந்து படித்து வந்த பிரஞ்சால் பாட்டீல் 2017ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் 124வது இடத்தை பிடித்து இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் ஆனார். பின்னர் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெற்ற பிரஞ்சால் கேரளாவின் எர்ணாகுள மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றினார்.

இந்த நிலையில் அவரது பணி அனுபவத்தின் அடிப்படையில் அதே மாநிலத்தில் உள்ள திருவனந்தபுர மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரஞ்சால் பாட்டீல். இதனையடுத்து இன்று காலை துணை ஆட்சியராக பொறுப்பேற்ற பிரஞ்சாலுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்து அவரை உபசரித்தனர்.

31 வயதான பிரஞ்சால் பாட்டீல் தனது முயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடாமல் உழைத்ததின் பேரில் இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரஞ்சாலின் இந்த உழைப்பு சக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறந்த அனுபவமாகவும், உத்வேகமாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.