India
“சசிகலா சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றது உண்மை” : கசிந்தது பரப்பன அக்ரஹாரா மர்மம்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிகளை மீறி சசிகலா வெளியே சென்று வருவது குறித்த காணொளி கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சசிகலா பல்வேறு சலுகைகளை அனுபவித்தது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இளவரசன், சுதாகரன் ஆகியோரும் அந்தச் சிறையிலேயே தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், சசிகலா சிறையிலிருந்து வெளியேறி ஷாப்பிங் சென்றதாக வெளியான காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.ஜி ரூபா, சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுகின்றன எனும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழு ஆய்வு நடத்தியது. அந்த விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கை ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
வினய் குமார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், அந்த அறிக்கையின் சில அம்சங்கள் ஊடகங்களுக்கு இன்று கசிய விடப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில், ‘சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்துள்ளார். சிறைத்துறை அதிகாரி சத்யநாராயண ராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். இரவு உடையில் சசிகலா சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆதாரமாக சி.சி.டி.வி காட்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலிஸாருக்கு தொடர்ந்து புகார் வந்ததைத் தொடர்ந்து இன்று போலிஸார் அங்கு அதிரடி சோதனை நடத்தி குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!