India
‘சுயமரியாதை’ என்ற வார்த்தையை பெரியார் ஏன் தேர்ந்தெடுத்தார்? - ப.திருமாவேலன் உரை
மனிதநேயம் - சுயமரியாதை குறித்த பன்னாட்டு மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் பெரியாரிய சிந்தனையாளரும், கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுத் தலைவருமான ப.திருமாவேலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அமெரிக்காவில் இயங்கி வரும் பெரியாரிய பன்னாட்டு அமைப்பும், அமெரிக்க மனிதநேய சங்கமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் ப.திருமாவேலன் பேசியதாவது:-
“பெரியார் தன்னை மகான், மாபெரும் பிறவி, பெரிய தலைவர், சாதனையாளர், புரட்சியாளர், சமூக சீர்திருத்தவாதி என்று என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.
'எந்தக் கட்டுப்பாடுக்குள்ளும் அடங்க மறுப்பவன் ' என்றே சொல்லிக் கொண்டார். சிறுவயதிலேயே அடுத்தவர் பேச்சை கேட்கும் பழக்கம் தனக்கு இருந்தது இல்லை என்கிறார். யார் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்பவனாக இருந்ததாகச் சொல்கிறார்.
பத்து வயதிலேயே வியாபாரத்துக்கு வந்துவிட்டேன், பலதரப்பட்ட மக்களை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அதன் மூலம் பல அனுபவங்களும் உண்மைகளும் தெரியவந்ததாகச் சொல்கிறார்.
தன்னுடைய வைதீகக் குடும்பத்தில் செய்யப்படும் சடங்குகள் அவருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தனது தாய், தந்தையர் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் பல கேள்விகளை எழுப்புகிறது. சுதந்திர எண்ணம் உடைய பெரியார், அந்தக் கட்டுப்பாடுகளை நிராகரிக்கிறார். மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை என்று நினைக்கிறார்.
மனிதனை மனிதன் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது, பேசக் கூடாது, நேரில் வரக்கூடாது, கோவிலுக்குள் வரக்கூடாது, ஒரு இடத்தில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது.இதைத் தான் கேள்வி கேட்டார் பெரியார்.
மனிதர்கள் ஒன்று, நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதே மனிதாபிமானத்தின் உன்னதமான கொள்கை. இந்த வேற்றுமைக்கு சாதி என்று பெயர் சூட்டுகிறார்கள். சாதியைக் கேள்வி கேட்கிறார்.
இந்த சாதியை மதம் காப்பாற்றுகிறது என்கிறார்கள். மதத்தை கேள்வி கேட்கிறார். இந்த மதத்துக்கு சாஸ்திரங்கள் அடிப்படை என்கிறார்கள். சாஸ்திரங்களைக் கேள்வி கேட்கிறார்.
இந்த சாஸ்திரங்களை காப்பாற்றுபர்களாக பிராமணர்கள் இருந்தார்கள். அவர்களை நிராகரிக்கிறார். இவை அனைத்தையும் உருவாக்கியவர் கடவுள் என்றார்கள்.
அப்படி ஒரு கடவுள் இருக்க முடியாது, மனிதனை மனிதன் பிரிப்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று கேட்டார். இது தான் பெரியாரியத்தின் அடிப்படை பரிணாம வளர்ச்சி.
இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்துக்கு மற்றவர்களாக இருந்தால் என்ன பெயர் வைத்து இருப்பார்கள்?கடவுள் மறுப்பு இயக்கம், மத எதிர்ப்பு இயக்கம், சாதி ஒழிப்பு இயக்கம் - இப்படித்தான் பெயர் சூட்டி இருப்பார்கள். பெரியார் என்ன பெயர் வைத்தார் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.
எந்த மனிதனாக இருந்தாலும் அவனது சுயமரியாதை பாதிக்கப்படக் கூடாது, அவன் சுயமரியாதை உள்ளனவாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இயக்கம் தொடங்கினார்.
'என் வாழ்வில் எத்தனையோ சொற்களை தேடிப் பார்த்துவிட்டேன். சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையான சொல்லை என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்றவர் பெரியார்.
ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆப்பிரிக்க குடியுரிமை பெற்றவர், ஆண் பெண் எல்லாருக்கும் பொதுவானது சுயமரியாதை. எல்லாரும் எதிர்பார்ப்பது சுயமரியாதை. எல்லோரும் விரும்புவது சுயமரியாதை.
பேதம் இல்லாத வார்த்தை சுயமரியாதை. அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தது தான் மனிதநேயத்தின் உச்சம்.” இவ்வாறு ப.திருமாவேலன் பேசினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!