India

மும்பை ஆரே வனப்பகுதி : ''இனி மரங்களை வெட்டக் கூடாது!'' - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மும்பையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக, மும்பையின் நூரையீரல் என அழைப்படும் ஆரே காலனி பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்டப்போவதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்தது.

இதனையடுத்து அந்த மரங்களை வெட்டக்கூடாது என தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மும்பை நீதிமன்றத்தில் 4 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த 4 மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, மரங்கள் வெட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது. இதனையடுத்து மும்பையின் மரங்கள் அடர்ந்த ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோ பணி நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து போராட்ட நடவடிக்கையைத் தவிர்க்க ஆரே காலனி, கோரேகான் சோதனைச் சாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே ஆரே பகுதியில் மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாணவர்கள் குழு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரணையை தொடங்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட தடை விதித்தனர். மேலும், முன்னொரு காலத்தில் ஆரே வட்டாரம் காடாக இருந்திருக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் குறித்து நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் மரங்களை வெட்டியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 29 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மேலும் மரங்களை வெட்டமாட்டோம் என்று மகராஷ்டிரா அரசு உறுதி அளித்துள்ளது.