India

மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழகத்தின் கருத்தை கேட்க முடியாது - கர்நாடகா அரசு அடாவடி!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு நிலம் அளக்கப்பட்டபோதே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட அனுமதி கோரி கர்நாடகா அரசு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. அதன் மீது கடந்த ஜூலை 17 ஆம் தேதி ஆலோசனை நடத்திய சுற்றுச்சூழல் துறை மதிப்பீட்டுக் குழுவானது, மேலும் பல விவரங்களைக் கேட்டது. அந்த விவரங்களுடன் விண்ணப்பிக்கும் படி கூறி அந்த விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது.

மேலும் தமிழக அரசு இந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி ஒரு சுமுகமான தீர்வுக்கு ஏன் வரக்கூடாது என்றும் கேட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கோரிய புதிய விவரங்களுடன் நேற்று முன்தினம் மீண்டும் கர்நாடகா அரசு விண்ணப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவு படி தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணிர் வழங்குவதற்கும், கர்நாடகாவின் குடி நீர் தேவைக்கும் இந்த மேகதாது அணை தேவை என்று அந்த விண்ணப்பக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக மழை பெய்யும் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க்கும் 177.25 டி.எம்.சி நீர் போக எஞ்சிய தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகக் கூறும் கர்நாடகா அரசு, மேகதாது அணை கட்டினால் வீணாகும் அந்த நீரை சேமிக்க முடியும் என்று ஒரு புதிய வாதத்தை முன்வைத்துள்ளது.

இதன் அடிப்படியில் அணைகட்ட அனுமதி வழங்க வேண்டும் எனவும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே மத்திய அரசு அடுத்த கட்ட ஒப்புதலைத் தர வேண்டும் என கர்நாடகா அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.