India

ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை நிறைவு - முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் அப்பாவு, அ.தி.மு.க சார்பில் இன்பதுரை உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 1ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ராதாபுரம் தொகுதியில் பதிவான 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்பதால், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணவேண்டும் எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கடைசி மூன்று சுற்று வாக்குகளை எண்ணவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதன்படி, தபால் வாக்குகள் மற்றும் மிண்ணனு வாக்கு எந்திரங்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன. இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் சுமார் 11.30 மணியளவில் நீதிபதிகள் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்குகள் எண்ணப்பட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் முடிவுகள் சமர்பிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க-வின் இன்பதுரை தொடர்ந்த வழக்கின் விசாரணை சற்று முன்னர் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கமுடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.