India

நிழல் உலக தாதா சோட்டாராஜனின் தம்பிக்கு சீட் கொடுத்த பாஜக கூட்டணி.. சர்ச்சை வெடித்ததால் வேட்பாளர் மாற்றம்!

சிறையில் இருக்கும் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் தம்பி தீபக் நிகல்ஜி, மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுவதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி (RPI) இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு பா.ஜ.க கூட்டணியில் ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சத்தார் மாவட்டம், பல்தான் சட்டமன்றத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிட தீபக் நிகல்ஜிக்கு சீட் வழங்கினார் அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் அத்வாலே. தீபக் நிகல்ஜி சிறையில் உள்ள பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சகோதரர் ஆவார்.

கடந்த 2018ம் ஆண்டு 22 வயது இளம்பெண் ஒருவர் தீபக் நிகல்ஜி மீது பாலியல் புகார் கூறினார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைவர்கள் பலர் மீது பாலியல் புகார்கள் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், பிரபல தாதாவின் சகோதரருக்கு, அதுவும் பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு பா.ஜ.க கூட்டணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை உருவாக்கியது.

இதையடுத்து, நேற்று திடீரென நிகல்ஜியின் பெயர் மாற்றப்பட்டு பல்தான் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் திகம்பர் அகவானே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.