India

“அதிகாரிகள் பரிந்துரைத்தது தவறில்லை; ஒப்புதல் அளித்தது தவறா?” - ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக மன்மோகன் சிங்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் சந்தித்து வரும் நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமரும் - காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரத்தை சந்தித்தனர்.

இதனையடுத்து, ப.சிதம்பரம் சார்பில் ட்விட்டரில், சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் என்னைச் சந்தித்து மிகவும் பெருமையாக உள்ளது. காங்கிரஸ் தைரியமாகவும், வலுவாகவும் இருக்கும் வரை நானும் தைரியமாகவும், பலமாகவும் இருப்பேன் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ப.சிதம்பரத்தை சந்தித்ததற்குப் பிறகு மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் நிதியமைச்சரும், எங்களது நண்பருமான ப.சிதம்பரம் சிறையில் இருப்பது கவலையளிக்கிறது. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம்.

நம்முடைய அரசாங்க விதிப்படி, எந்த ஒரு முடிவையும் தனி நபரால் தன்னிச்சையாக எடுக்க முடியாது. பல்வேறு அதிகாரிகள், பொறுப்பாளர்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்ட பிறகே அரசு சார்ந்த எந்த முடிவும் எடுக்கப்படும்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அரசின் 6 செயலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பரிந்துரைத்த முடிவுக்குத் தான் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்திருந்தார். அதிகாரிகளும், செயலாளர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர்கள் பரிந்துரைத்ததற்கு ஒப்புதல் அளித்த அமைச்சர் எப்படி குற்றவாளியாவார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரிந்துரையை அங்கீகரித்ததற்கு ஒப்புதல் அளித்ததற்காக அதில் ஏற்படும் தவறுக்கு அமைச்சருக்கு மட்டும் பொறுப்பு என்றால் நம் அரசாங்க அமைப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் சரிந்துவிடும். இது புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.