India

ப.சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்க மறுப்பு : அக்., 3 வரை காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

2007ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூபாய் 305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் மீது புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அடுத்த நாளே (ஆகஸ்ட் 21) ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் சி.பி.ஐ காவலுக்கு அனுப்பப்பட்டார். சி.பி.ஐ காவலுக்கு மீண்டும் மீண்டும் 4 முறை அனுப்பப்பட்ட ப.சிதம்பரத்தை கடந்த 5ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ப.சிதம்பரத்தின் 14 நாள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் இன்று பிற்பகல் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில், சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சிபிஐ கோரிக்கைக்கு ப.சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

4 நாட்களுக்கு மேல் காவலை நீட்டிக்கக் கூடாது என ப.சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கையை நிராகரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வரும் அக்டோபர் 3ம் தேதி வரை, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.