India

“மொழி உணர்வு எனும் நெருப்போடு விளையாட வேண்டாம்” : பா.ஜ.க-வுக்கு கி.வீரமணி எச்சரிக்கை!

‘இந்தியா ஒரே நாடு - எனவே இந்திதான் ஒரே ஆட்சி மொழி’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது நாட்டைப் பிளவுபடுத்தும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :

உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா ஒரே நாடு - இதில் ஒரே மொழியாக இந்தியை எல்லோரும் ஏற்று பேசினால்தான் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பன்முகத் தன்மை அங்கீகாரத்திற்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்னாவது?

வேற்றுமையில் ஒற்றுமை என்பதால் இந்திய நாடு ஒரு கூட்டமைப்பு - பல மாநிலங்களைக் கொண்ட கூட்டமைப்பு (Union of States) ஆகும். பல மாநிலங்களில் பல மொழிகள் - இந்தியை விட மூத்ததும், இலக்கண - இலக்கியச் செறிவும் கொண்ட பல மொழிகள், பண்பாடுகளை உள்ளடக்கியது!

பல நாடுகளிலும் பல மொழிகள் ஆட்சி மொழிகளே!

இதில் ஒரே மொழி என்று கூறுவது மக்களாட்சி தத்துவத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அவர்கள் பதவியேற்குமுன் இந்திய அரசமைப்புச் சட்டத்தினை பாதுகாப்போம் என்று கூறிய உறுதிமொழிக்கும் முற்றிலும் எதிரானது!

சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளில், உலக அரங்கில் தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்து, பல மொழிகளுக்கும் வாய்ப்பைத் தந்து, அத்தனை மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதித்து, அங்கே ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்தி வருவதை உள்துறை அமைச்சர் அறிய மாட்டாரா?

அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணைக்குள் இந்தி போன்ற மற்ற 21 மொழிகளையும் அங்கீகரிக்கப்பட்டதற்கு இது விரோதமாகும்.

ஏற்கெனவே கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று?

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும், மற்றவர்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து, ஆட்சி மொழியாக இருக்கும் என்பது வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டதானது - இந்த அரசையும்கூட கட்டுப்படுத்தக் கூடியதே!

காரணம் ஜனநாயகத்தின் இதுபோன்ற முக்கிய உறுதிமொழிகள் ஆட்சிகள் மாறினாலும் கடைப்பிடித்தே தீர வேண்டிய வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தவையே!

எதற்காக இப்படி?

ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் யார்?

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் உண்மை எதிரிகளை இதன் மூலம் நாடும் உலகும் நன்கு கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!

மக்களின் மொழி உணர்வு என்ற நெருப்போடு விளையாடுவது புத்திசாலித்தனமல்ல.

பொருளாதார பின்னடைவை திசை திருப்பவே இப்படி சில கருத்துக்கள்; அதுகுறித்த விவாதம் நடைபெறுவது நல்லது என்ற நோக்கமும் இதன் பின்னால் இருக்கிறது என்ற அய்யமும் வலுக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.