India

“ப.சிதம்பரம் மீது மட்டும் ஏன் கைது நடவடிக்கை?” - அவர் சார்பாக ட்வீட் செய்த குடும்பத்தினர்!

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டார்.

அதன்படி, பல்வேறு அடிப்படை வசதிகளுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். ப.சிதம்பரம் கைது நடவடிக்கை பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் சார்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர்.

அதில், “மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், நீங்கள் கைது செய்யப்பட்டுள்ள வழக்கிற்காக, உங்களுக்குப் பரிந்துரை செய்த, பரிசீலித்த ஒரு டஜன் அதிகாரிகள் கைது செய்யப்படவில்லையே? கடைசி கையொப்பத்தை நீங்கள் இட்டதற்காகத்தான் கைது நடவடிக்கையா? எனக் கேட்கிறார்கள்.

இதற்கு என்னிடம் பதிலில்லை. எந்த அதிகாரியும் இந்த விஷயத்தில் தவறு செய்யவில்லை. யாரும் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை” என ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.