India

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - பரபரப்புத் தகவல்கள்! 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால், நாட்டில் ஆட்டோமொபைல் சந்தை தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. பல்வேறு வாகன தயாரிப்பாளர்களும், விநியோகிஸ்தர்களும் தங்கள் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது மானேசர் மற்றும் குர்கான் ஆலைகளை இரண்டு நாட்களுக்கு மூடும் திட்டத்தை அறிவித்துள்ளது. செடிகள் செப்டம்பர் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூடப்படும். முன்னதாக, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா நெருக்கடியைத் தொடர்ந்து ஆலையை மூடியிருந்தன.

மாருதி சுசுகி விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 33% குறைந்துள்ளது கடந்த மாதம் 106413 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இது 15,8189 கார்களை விற்பனை செய்தது. ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனை 51% சரிந்தது 8291 ஹோண்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

சில நிறுவனங்கள் தற்காலிகமாக தங்கள் உற்பத்தி ஆலைகளை மூடுகின்றன. பல நிறுவனங்கள் ஷிப்டுகளை குறைக்கின்றன. தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஆகஸ்டு மாதத்திற்கான விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டபோது கூட, வாகன உற்பத்தியாளர் தொடர்ச்சியான இழப்பை மட்டுமே சொல்ல முடியும். ஆகஸ்டில் மட்டும் ஆட்டோமொபைல் விற்பனை 30 சதவீதம் சரிந்துள்ளது.

இத்தகைய வீழ்ச்சிக்கு என்ன காரணம்? ஆட்டோமொபைல் துறையின் அதிரடி சறுக்கலுக்கு யார் காரணம்?

இந்தியாவில் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் மாசு அளவைக் கட்டுப்படுத்த, 2000-ம் ஆண்டு பி.எஸ் (Bharat Stage) கொள்கைகளை அமைத்தது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம். ஐரோப்பிய விதிகளைப் (Euro Norms) பின்பற்றி வடிவமைக்கப்பட்டதால், அதில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பாரத் ஸ்டேஜ் கொள்கைகளும் அவ்வப்போது மாற்றம் கண்டன.

இதனடிப்படையில் 2005-ம் ஆண்டு பி.எஸ் 2, 2010-ம் ஆண்டு பி.எஸ் 3 ரக வாகனங்கள் நாடெங்கும் பயன்பாட்டுக்கு வந்தன. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 3 ரக வாகனங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டு, பி.எஸ் 4 ரக வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எஸ் 6 விதிகள் அமலுக்கு வருகின்றன.

இதனால் தற்போது நடப்பில் உள்ள பி.எஸ் 4 ரக வாகனங்களை மார்ச் 31, 2020-க்குப் பிறகு விற்பனை செய்யவோ, பதிவுசெய்வோ முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.

ஏப்ரல் 2020 முதல் மாசு கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் அறிவித்து விட்டதால், தற்போதுள்ள பிஎஸ் 4 வாகனங்களின் சந்தை மதிப்பு அதிரடியாக குறைந்துவிடும் என்ற பயம் நுகர்வோருக்கு ஏற்பட்டது. பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் பெட்ரோல்-டீசல் வாகனக் கொள்கையின் சாராம்சங்களும் நுகர்வோரை பீதியடையச் செய்தது.

நுகர்வோரின் இந்த அச்சத்தினை போக்க மத்திய அரசு போதிய சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தரும் வாக்குறுதிகளை யாரும் நம்பத் தயாராக இல்லை.

நாட்டில் மின்சார வாகனங்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் ஒன்றாக வளரும் என்று பிரதமர் கூறினார். மார்ச் 2020 க்கு முன்னர் நிசான் பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்தால், அவர்களின் பதிவு காலாவதியாகும் வரை அவற்றைப் பயன்படுத்துவோம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆனால், நாட்டில் தற்போதுள்ள ஸ்திரதன்மை இல்லாத பொருளாதார சூழலில் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரின் வாக்குறுதிகளை எப்படி நம்புவது என்பதுதான் நுகர்வோர் முன் உள்ள கேள்வி.

இதுமட்டுமல்லாமல் , வாகனங்களின் விலை உயர்வும், அளவுக்கதிகமாக ஜி.எஸ்.டி.யும் ஆட்டோமொபைல் துறையை படுக்க வைத்து விட்டது. பிஎஸ் 6 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பல நிறுவனங்கள் தங்களது பல புதிய மாடல்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இதுபோன்ற சூழ்நிலையால் நிறுவனங்களுக்கு கடுமையான நிதி இழப்புகளும், நெருக்கடியும் ஏற்பட்டது.

ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு வங்கிகளும் ஒருவகையில் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வங்கிகளின் கடன் நடைமுறைகளை கடுமையாக்குவது மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நெருக்கடி ஆகியவை வாகன விற்பனையில் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆட்டோமொபைல் சந்தையில் இரு சக்கர வாகனங்கள் ஒரு முக்கிய பகுதியாகும். பலர் கடன் வாங்கி இரு சக்கர வாகனங்களை வாங்குகிறார்கள். நிறுவனங்கள் அல்லது சிறிய வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்க போதுமான நிதி இல்லாததால் இருசக்கர வாகனத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சலுகையோடு சலுகைகள் வழங்கினாலும் நுகர்வோரால் இருசக்கர வாகனங்களை வாங்க முடியவில்லை.

இதுதவிர மற்ற தொழில்துறைகளில் கடுமையான பின்னடைவுகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் பணத்தை இழக்க நுகர்வோர் விரும்பவில்லை. நாடு மந்தநிலையை எதிர்கொண்டு வருவதாகவும், இதன்காரணமாக நிலைகுலைந்துள்ள மக்கள் கார்களை வாங்கும் மனநிலையில் இல்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களிடம் வரியையும், பீதியையும் கட்டுக்கடங்காத அளவிற்கு ஏற்றிவிட்டதன் விளைவே ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். எந்நேரமும் அரசியல்மட்டுமே செய்துகொண்டிருக்கும் மோடி அரசு, பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய நேரத்தை ஒதுக்கினால் மட்டுமே ஆட்டோமொபைல் துறை எழுந்து நிற்கும்.