India

பொருளாதார சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, புதிய உச்சம் தொட்டது தங்கம் - 30 ஆயிரம் ரூபாயைக் கடந்தது சவரன்!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூபாய் 216 அதிகரித்து ரூபாய் 29,832-க்கு விற்பனை ஆனது. இன்று மேலும் அதிகரித்து சவரன் ரூபாய் 30,120க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 27 ஆயிரத்தைத் தொட்ட நிலையில், தற்போது ரூபாய் 30,000 த்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பொருளாதார மந்தநிலையால் அச்சம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஜிடிபி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு மாத இடைவெளியில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 3 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது தங்கம் வாங்க விரும்பும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் சில ரூபாய்கள் விலை குறைந்தால் அடுத்த நாள் ஜெட் வேகத்தில் விலை ஏறிவிடுவதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3,702-க்கும், ஒரு சவரன் ரூ.29,616-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3,729-க்கும், ஒரு சவரன் ரூ.29,832-க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில் மேலும் 288 ரூபாய் அதிகரித்து தங்கம் சவரனுக்கு ரூபாய் 30,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது தங்கத்தின் மதிப்பு.

தங்கம் விலை அதிகரித்து வருவது போலவே வெள்ளியின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 51.68 க்கும், ஒரு கிலோ வெள்ளி 51,678 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.