India

லைசென்ஸ், ஹெல்மெட் இல்லாமல் சென்ற டெல்லி இளைஞருக்கு ரூ. 23,000 அபராதம் : கெடுபிடியால் பொதுமக்கள் குமுறல்!

மத்திய அரசு மேற்கொண்ட புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு முன்பிருந்த அபராதத் தொகையை விட பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டம், செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் போலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஹெல்மெட் இல்லாமல் வந்த இளைஞரை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, தினேஷ் மதன் என்ற அந்த இளைஞரிடம் வாகனத்துக்கான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் என எதுவும் இல்லாததால் ஒவ்வொன்றுக்கும், புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் விதித்து ரூபாய் 23 ஆயிரத்துக்கான செலானை வழங்கியுள்ளனர்.

போலிஸார் அளித்த செலான் படி, லைசென்ஸ் இல்லாததற்கு ரூ.5,000, ஆர்.சி புக் இல்லாததற்கு ரூ.2,000, இன்சுரன்ஸ் இல்லாததற்கு ரூ.2,000, ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று இல்லாததற்கு ரூ.10 ஆயிரம் என்பது உள்பட 23 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடுமையான அபராத விதிப்பால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். அவசரத்திற்காக எங்கேனும் செல்லும்போது மறதியால் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நிலை ஏற்பட்டாலும் கூட அபராதம் விதிக்கிறார்கள்.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்காமல் மக்களிடம் அபராதத்தை மட்டும் வசூலித்து வருவாயை அதிகரித்துக் கொள்கிறார்கள். ஏற்கெனவே விலைவாசி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த அபராத முறையும் மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர்.