India
ஒன்றரை வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த தாய் : நிலச்சரிவால் கேரளாவில் ஏற்பட்ட சோகம்!
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
கடந்த ஆண்டு கேரளாவைப் புரட்டியெடுத்த வெள்ளத்தின் சுவடு முழுமையாக மறைவதற்குள் அடுத்த பேரிடர் மலையாள தேசத்து மக்களை அலைக்கழித்து வருகிறது. மலப்புரம், வயநாடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40 பேராவது சிக்கியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வேளையில், நிலச்சரிவில் சிக்கிப் பலியான குடும்பம் குறித்த உருக்கமான தகவல் வெளிவந்திருக்கிறது. மலப்புரம் அருகேயுள்ள சாத்தக்குளம் பகுதியைச் சேர்ந்த சரத், தனது காதல் மனைவி கீத்து, ஒன்றரை வயதுக் குழந்தை துருவ் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிகழ்ந்த நிலச்சரிவு இக்குடும்பத்தை விழுங்கியுள்ளது.
சரத்தும், அவரது தாயாரும் வீட்டுக்கு வெளியே நிற்கும்போது, கடும் மழையோடு நிலச்சரிவு ஏற்படவே, “நிலச்சரிவு வருகிறது.. ஓடுங்கள்” எனக் கத்திக்கொண்டே ஓடியுள்ளார் சரத். அதற்குள், வீட்டுக்குள் இருந்த அவரது மனைவி கீத்து, ஒன்றரை வயது மகன் துருவ், தாய் சரோஜினி ஆகியோர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு மண்ணில் புதைந்தவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. அப்போது, கீத்து தனது மகன் துருவ்வை நெஞ்சோடு அணைத்தபடியே இறந்துகிடந்தது, மீட்புக் குழுவினரையும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களையும் கலங்க வைத்துள்ளது.
சரத்தும், கீத்துவும் காதல் திருமணம் செய்துகொண்டதால் கீத்துவின் பெற்றோர் கோபத்தில் பேசாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை பிறந்ததையடுத்து சமாதானமான கீத்துவின் பெற்றோர் இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைக்கத் திட்டமிட்டு இருந்துள்ளனர்.
ஆனால், அதற்குள் இப்படியொரு சோகம் நிகழ்ந்துள்ளது. தங்களது மகள், அவரது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்துள்ளதைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்டபோது சரத் கத்திக்கொண்டே ஓடியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !