India

பண்டிகை நாளில் கூட வேதனையை அனுபவிக்கும் காஷ்மீர் மக்கள் : தொழுகை முடிந்ததும் 144 தடை உத்தரவு அமல் !

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மசோதா நிறைவேற்றியதை அடுத்து காஷ்மீரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடாதவாறு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காஷ்மீரில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள் என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகை நடத்துவதற்காக சில மணிநேரம் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தடை அமலுக்கு வந்தது.

தொழுகை நடத்தியதற்கு பிறகு, ஏராளமானோர் வீதியில் போராட்டத்திலும், பேரணியிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் காலை தொழுகை நடத்துவதற்கு மட்டும் தடை உத்தரவு தளர்த்தப்பட்ட குறிப்பிட்ட சில மசூதிகளுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இவ்வாறு இருக்கையில், கடந்த 7 நாட்களுக்கும் மேலாக தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக இணைய, செல்ஃபோன் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், காஷ்மீர் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இருப்பினும், மாநில காவல்துறை காஷ்மீரின் 300 இடங்களில் முக்கிய தகவல்களை தெரிவிப்பதற்காக பொது தொலைபேசி வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பக்ரீத் தொழுகைக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோரும் இன்றளவும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.