India

பெண் குழந்தைகளைக் கொண்டாடும் கேரளா... வெறுக்கும் சிக்கிம்... தமிழகத்தில் என்ன நிலை?

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆண்- பெண் விகிதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் விவாதங்களின் மத்தியில் அதுகுறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

தேசிய குடும்ப நலம் மற்றும் சுகாதார கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை இந்தியாவில் எடுக்கப்படும். ஒரு மாநிலத்தில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என பாலின விகிதம் ஆய்வு செய்யப்படும்.

2005-2006 ஆண்டுகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதம் இருந்தது. 2015-2016 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 919 வரை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 1005-20016ம் ஆண்டுகளில் 897 என இருந்த பாலியல் விகிதம் 954 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 2005-2006 காலகட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 925 பெண் குழந்தைகள் என இருந்த நிலையில் 122 புள்ளிகள் அதிகரித்து 2015-2016 ஆண்டுகளில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1047 பெண் குழந்தைகள் என பாலின விகிதம் நிலவி வருகிறது.

அடுத்த இடத்தில் தாத்ரா- நாஹர் ஹவேளியில் ஆயிரம் ஆண்களுக்கு 1,013 பெண்கள் என்ற விகிதமும், மேகாலயாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1,009 பெண்கள் என்கிற விகிதமும் நிலவுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் என்று இந்த பாலின விகிதம் ஓரளவிற்கு சமநிலையை அடைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பாலியல் விகிதம் அதிக அளவு உயர்ந்திருந்தாலும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 860 பெண் குழந்தைகள் (2015-2016) என்ற எண்ணிக்கையில் தான் பாலின விகிதம் உள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் பாலின விகிதம் கீழ்நோக்கிச் கொண்டு சென்றுள்ளது. அங்கு பாலின விகிதம் 175 புள்ளிகள் குறைந்ததோடு மட்டுமல்லாமல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 809 பெண் குழந்தைகள் என்ற பிறப்பு விகிதத்தையும் பெற்றுள்ளது.