India

“இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது” - மத்திய அரசு அறிவிப்பு!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

அப்போது துணிச்சலுடன் செயல்பட்டு பாகிஸ்தானின் F16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார் தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான். எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் அபிநந்தன் விழுந்ததால் அந்நாட்டு இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அவர், பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

பாகிஸ்தான் இராணுவத்திடம் அபிநந்தன் சிக்கியதும், வெளியிடப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தன. இதனையடுத்து இந்திய அரசின் அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாதுகாப்பு படையில் வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான வீர் சக்ரா விருதை அபிநந்தன் வர்தமானுக்கு வழங்கும்படி மத்திய அரசுக்கு இந்திய விமானப்பட பரிந்துரைத்திருந்தது.

தற்போது அந்த பரிந்துரையை ஏற்று வருகிற ஆக.,15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருதை மத்திய அரசு வழங்கவுள்ளது.