India

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு - அதிகரிக்கும் பதற்றம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை திரும்பப்பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது.

மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கருதி காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமத் மிர் ஆகியோர் விமானம் மூலம் இன்று காஷ்மீர் வந்தனர். அவர்கள் இருவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைத்தனர்.

குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார் என மத்திய அரசு கூறி உள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் டெல்லிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், ''காஷ்மீர் மக்கள் சோகமாக உள்ளார்கள். முதல்முறையாக காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்கலுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் இயல்பாக உள்ளது போல் காட்டுவதற்காக காஷ்மீர் மக்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உணவு சாப்பிடும் படத்தை வெளியிட்டுள்ளனர்'' இவ்வாறு தெரிவித்தார்.