India

“முதலில் இதை செய்யுங்கள்” : மேகதாது அணை விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு அறிவுறுத்தல்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு நிலம் அளக்கப்பட்டபோதே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் முயற்சி செய்து வருகிறது.

மேகதாது அணை கட்டுவதற்கான திருத்திய மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கும்படி கர்நாடக அரசு ஜூன் 22ம் தேதி விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலிக்க மத்திய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டுக்குழு ஜூலை 19ம் தேதி கூடியது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக உடன்பாடு எட்டினால் அனுமதி வழங்கப்படும் என்றும் அதற்கான கூடுதல் விளக்கங்கள் மற்றும் தகவல்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கும் படியும் கர்நாடக அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, மேகதாது அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில், அணை கட்டுவதற்கு தமிழக அரசின் உரிமை தேவையில்லை என முடிவெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.