India

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முதல் நாளே காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு... 17 வயது சிறுவன் பரிதாப பலி!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவுகளை கடந்த 5ம் தேதி நீக்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய மோடி அரசு. இதற்கு முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற உள்ளது எனக் கூறி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கான அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முந்தைய நாள் மாநிலம் முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டது. தொலைதொடர்பு சாதனங்கள், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு, காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்தது மத்திய அரசு.

இந்த நிலையில், காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்ட நாளன்று ஒசைப் அல்தாஃப் என்ற 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பெல்லட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய அச்சிறுவன் ஆறு ஒன்றில் குதித்ததில் உயிரிழந்தான். ஒசைப் அல்தாஃப் உடன் சேர்ந்து ஆற்றில் குதித்த அவனது நண்பர்கள் இருவரை மணல் அள்ளும் நபர் ஒருவர் காப்பாற்றியதால் அவர்கள் உயிர் பிழைத்தனர். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி ஒசைப் அல்தாஃப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான்.

ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து உயிரிழந்த சிறுவனின் உடல் அவரது தந்தை மராசி அல்தாஃபிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிறுவனின் உடலில் 13 இடங்களில் பெல்லட் குண்டுகள் துளைத்திருந்ததாகவும், அவை பெரும்பாலும் கண் பகுதியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரை இந்திய ஒன்றியத்துடன் இணைத்த நாளன்றே இராணுவத்தினரின் தாக்குதல் அரங்கேறி இருப்பது அம்மாநில மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தியுள்ளது.