India

பெரும்பான்மையை பயன்படுத்தி அவசரகதியில் மசோதாக்கள் நிறைவேற்றம் : ராஜ்யசபாவில் 17 எதிர்க்கட்சிகள் முறையீடு!

17வது மக்களவையின் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் தன்னுடைய பெரும்பான்மையை பயன்படுத்தி மக்களுக்கு எதிரான மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றிய வண்ணம் உள்ளது பா.ஜ.க.

மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்கள் எதுவும் எவ்வித விவாதத்துக்கும் உட்படுத்தாமல் ஆளுங்கட்சியினரே முடிவெடுத்து அதற்கு ஆதரவு தெரிவித்து நிறைவேற்றி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அணுவளவும் சிந்திக்காமல் பா.ஜ.க. உதாசீனப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் என்.ஐ.ஏ., முத்தலாக், ஆர்.டி.ஐ., என பல முக்கியமான சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து அதனை மக்களவையில் நிறைவேற்றிய பா.ஜ.கவால் மாநிலங்களவையில் பலம் குறைவாக உள்ளதால் நிறைவேற்றாமல் உள்ளது.

எனவே, இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கும், தேர்வுக்குழுவுக்கும் அனுப்பி ஆராய வேண்டும் எனக் கூறி மாநிலங்களவை சபாநாயகரான வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பிக்கள் கடிதம் அளித்து முறையிட்டுள்ளனர்.

புதிதாக சட்டம் இயற்றுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும், நாடாளுமன்ற விதிகளையும் மத்திய பா.ஜ.க அரசு மீறி செயல்பட்டு வருவதாகவும் அக்கடிதத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பா.ஜ.கவுக்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அத்தனை மசோதாக்களும் நிலைக்குழுவுக்கும், தேர்வுக்குழுவுக்கும் அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகையால் இது தொடர்பாக மாநிலங்களவை தலைவரும், துணைத்தலைவரும் நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதமளித்து வலியுறுத்தியுள்ளனர்.