India

உங்கள் பெரும்பான்மையை இப்படியா பயன்படுத்த வேண்டும்? - ஆர்.டி.ஐ விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு சோனியா கண்டனம்

அரசு சார்ந்த திட்டங்களின் நிலை மற்றும் அதன் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக கடந்த 2005ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI).

தற்போது இரண்டாவது முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைத்துள்ள மோடியின் பா.ஜ.க. அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவுசெய்துள்ளது.

அதில், மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் போன்றவை தொடர்பாக திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னர் நேற்று (ஜூலை 22) மத்திய அரசு தாக்கல் செய்தது.

இருப்பினும், மாநிலங்களவையில் பா.ஜ.க அரசுக்கு பலம் இல்லாததால், ஆர்.டி.ஐ. திருத்த மசோதா நிறைவேறுவதில் சற்று கடினம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”ஆர்.டி.ஐ சட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு ஒரு இடைஞ்சலாகவே கருதுகிறது.

மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து தெரிவதை அரசு விரும்பவில்லை. ஆர்.டி.ஐ. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குடிமக்களின் உரிமையை பறிக்கும் செயல்.” என அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

மேலும், ”தேர்தல் ஆணையம், சி.பி.ஐ போன்ற மத்திய கண்காணிப்பு அமைப்புகளைப் போல், தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தையும் மோடி அரசு பறிக்க முயற்சிக்கிறது. இதற்காகவே நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான்மையை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.