India

8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? : உச்சநீதிமன்றம் கேள்வி!

சென்னை சேலம் இடையே 276 கி.மீ., தொலைவிற்கு 8 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

விவசாயிகளை வஞ்சித்து எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதுடன், டெண்டர் லாபங்களுக்காக ‘அதிவேக சாலை’ எனப் பெயர் மாற்றி, திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டுகிறது எடப்பாடி அரசு.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று, 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கமுடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. சேலம் - சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் நாளை காலைக்குள் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைக் கூறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், 8 வழிச் சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எத்தனை பேர் வழக்குத் தொடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியதோடு, நாளைக்குள் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இதையடுத்து, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.