India

பலனளிக்காத பேச்சுவார்த்தை- கவிழும் குமாரசாமி ஆட்சி : சட்டசபையை சுற்றி 144 தடை உத்தரவு !

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகலால் ஆட்டம் கண்டு வருகிறது. மணிக்கு மணிக்கு யாரும் எதிர்பாராத வண்ணம் நேரும் திடீர் திருப்பங்களால், அம்மாநிலத்தில் குமாராசாமி ஆட்சி நீடிக்குமா? கவிழுமா? என்கிற கேள்வி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், ம.ஜ.த, பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் வெளியான தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததாக அமைந்தது. இதனால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சி இரண்டும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

எப்படியாவது ஆட்சி அமைத்துவிடும் நம்பிக்கையில் இருந்த எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க.,வுக்கு இது பெரும் இடியாக அமைந்தது. இருந்தாலும் எப்படியாவது இந்த ஆட்சியைக் கலைத்துவிடவேண்டும் என்கிற நோக்கத்தில் பல்வேறு திரைமறைவு அரசியலை அது நிகழ்த்தி வந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.க வலையில் வீழ்ந்ததை அடுத்து, தொடர்ந்து ராஜினாமா படலம் அரங்கேறியது. இதனால் காங்கிரஸ்- ம.ஜ.த ஆட்சி வலுவிழந்தது.

ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான டி.கே சிவக்குமார் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இதன் அடிப்படையில், பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் குமாரசாமி பதவி விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தை அடுத்து, ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளதாகவும், அதனையடுத்து மாநில அரசு கலைக்கப்பட்டதாக ஆளுநர் அறிவிக்க உள்ளதாகவும் கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கர்நாடக சட்டசபையான விதான் சவுதாவைச் சுற்றி 2 கி.மீ., தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களுரூ காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.