India

மணமக்களுக்கு எச்.ஐ.வி. டெஸ்ட் கட்டாயம் : சட்டம் கொண்டுவர கோவா அரசு திட்டம்!

திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணமக்கள் எச்.ஐ.வி. சோதனைக்கு உட்பட்டாக வேண்டும் என கோவா மாநில அரசு சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்துவதோடு விட்டுவிடாமல் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வித பாதிப்பும் இந்த தொற்று நோயால் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக புதிய சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது கோவா மாநில அரசு.

அதாவது, திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமக்கள் கட்டாயம் எச்.ஐ.வி. சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அறிவிக்க உள்ளது. இதற்காக கோவா மாநில சட்டத்துறை ஆய்வு மேற்கொண்டு ஒப்புதலும் அளித்துள்ளது.

இதனையொட்டி, எதிர்வரும் மழைக்கால சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எச்.ஐ.வி. கட்டாய பரிசோதனை குறித்து மசோதா தாக்கல் செய்து சட்டமாக விரைவில் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கோவாவின் கடலோர பகுதிகளில் சோதனையை செயல்படுத்தி வருகிறது மாநில அரசு. இதேபோல், கடந்த 2006ம் ஆண்டில் காங்கிரஸ் கோவா மாநிலத்தை ஆட்சி செய்தபோது, எச்.ஐ.வி சோதனைக்கான சட்டத்தை முன்மொழிந்தது. அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.