India

150 ரூபாய் பன்னீர் பட்டர் மசாலாவுக்காக ரூ.55,000 அபராதம் : சிக்கலில் Zomato !

ஆன்லைனில் உணவுப் பொருட்களையும், உணவுகளையும் ஆர்டர் செய்யும் முறை தற்போது தலைதூக்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஃபுட்-டெலிவரி செயலிகள் உள்ளன. இதன் மூலம் அலைச்சல் எதுவும் இல்லாமல் இருக்கும் இடத்திலிருந்தே ஆப்களில் புக் செய்தால் போதும். உணவு உங்கள் வீடு தேடி வரும்.

ஆனால், சில சமயங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளாலும், தவறுதல்களாலும் சொதப்பல்களும் நடைபெற்று வருகின்றன.

இதனை சிலர் கண்டும் காணாமல் கஸ்டமர் கேரிடம் மட்டும் புகாரை தெரிவித்துவிட்டு நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று அலட்சியமாக இருப்பர்.

ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில், ஸொமேட்டோ ஆப் மூலம் பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் செய்த வழக்கறிஞர் ஷண்முக் தேஷ்முக் என்பவருக்கு காத்திருந்த அதிர்ச்சியே வேறு.

ஆர்டர் செய்த உணவை பிரித்துப் பார்த்து பன்னீர் பட்டர் மசாலாதான் டெலிவரி ஆகியிருக்கிறது என எண்ணி சாப்பிட்ட பின்னர் தான் தெரிந்தது அது சிக்கன் மசாலா கிரேவி என்று.

இதனால் ஆத்திரமடைந்தவர், புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஸொமேட்டோ நிறுவனத்துக்கு 50 ஆயிரம் அபராதமும், வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை அளித்ததற்காக அவருக்கு 5 ஆயிரமும் அளிக்க உத்தரவிட்டது.

இது குறித்து பதிலளித்த ஸொமேட்டோ நிறுவனம், ஆர்டர் மாற்றப்பட்டதற்கு ஹோட்டல்தான் பொறுப்பு. நாங்கள் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி மட்டும்தான் செய்வோம் என்று அலட்சியமாக கூறியுள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளருக்கு சரிவர சேவை புரியாததற்கு அபராதம் விதித்து அதனை 45 நாட்களுக்குள் மனுதாரரிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.