India

உச்சத்தில் வேலையில்லா திண்டாட்டம் : பத்தில் 8 பேருக்கு நிரந்தர வருமானம் இல்லை!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறது. பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் நிலையில், வேலைவாய்ப்பின்மை திண்டாட்டம் சரிசெய்யப்படுமா என பலரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், மிண்ட் ஊடகம் இரண்டாவது முறையாக 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், இளைஞர்கள் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு குறித்த அச்சம் அதிகமாக ஏற்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 2017- 2018-ம் ஆண்டில் வேலையின்மை விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு 6.1% ஆக உயர்ந்துள்ளது கால அளவிலான தொழிலாளர் படை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அப்போது நிரந்தர ஊதியம் பெறுபவர்களின் விகிதம் 23% ஆக இருந்தது.

காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலைகளில் வேலைபார்த்தவர்கள் 8.13 சதவீதமாக இருந்தது பா.ஜ.க ஆட்சியில் 4.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போதைய ஆய்வின்படி பத்தில் இரண்டு பேர் மட்டுமே நிரந்தர ஊதியம் பெறும் வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளனர்.

பெரும்பாலான இந்தியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இது வேலையின்மையை மறைமுகமாக உணர்த்தும் குறியீடாகும்.

அரசால், தனது குடிமக்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியாததன் விளைவே, எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை எனும் சூழலுக்கு மக்களைத் தள்ளும். அப்படியான சூழலில் இப்போது இருக்கிறோம்.