India

மலக்குழியில் சிக்கி இதுவரை 801 துப்புரவுப் பணியாளர்கள் மரணம் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

மனிதக்கழிவுகளை அகற்றுவது, துப்புரவுப் பணி தொடர்பான ஆய்வுகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வினை மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. தேசிய ஆணையத்தின் தலைவர் மன்ஹர் வலிஜ்பாய் ஜாலா தலைமையில் ஆறு நாள் பயணமாக இந்த ஆய்வு குழு இமாசலப் பிரதேசம் சென்றுள்ளார்.

இதனிடையே தேசிய ஆணையத்தின் தலைவர் மன்ஹர் வலிஜ்பாய் ஜாலா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, ”நாடு முழுவதும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தவிட்டுள்ளேன்.

மேலும் இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் அவல நிலை இன்னும் தொடர்கிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் 34,859 மலக் குழிதொட்டிகள் இன்னும் உள்ளது.

சாக்கடைகளை அள்ளுவதற்கு இயந்திரமயத்துக்கு மாறிய பிறகு அந்தத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அதிகாரிகளுக்கான 622 இடங்கள் காலியாக உள்ளதை விரைவில் நிரப்ப வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும், இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில்,"பல்வேறு தொழில்நுட்பங்களினால் நாடு அபார வளர்ச்சி அடைந்து வருகிறது என பலர் பெருமை பேசும் இந்த வேளையில், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்னும் தொடர்கிறது. மலக்குழியில் இறங்கினால் தான் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதால் விரும்பம் இல்லாத பலர் இந்த வேலையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக நவீன தொழிலில் நுட்ப இயந்திரங்களை அதிகரிக்க ஆளும் அரசு முயற்சி செய்யாமல் இருப்பது வேதனைக்குறிய விசயமே” என்று அவர் தெரிவித்துள்ளார்.