India

பருவமழை தீவிரத்தால் கேரளாவுக்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கேரள மாநிலத்தில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் கேரளாவில் உள்ள 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருச்சூர், மலப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.