India
தான் பிறந்தபோது கவனித்துக்கொண்ட நர்ஸை சந்தித்த ராகுல் : வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போது பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதற்கட்டமாக தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த வயநாடு தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
டெல்லி மருத்துவமனையில் ராகுல்காந்தி பிறந்தபோது, அந்த மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்த ராஜம்மா என்பவர்தான் அவரை கவனித்துக் கொண்டார். இந்த நிலையில், ராஜம்மா தற்போது ஓய்வு பெற்று வயநாட்டில் இருப்பதாக ராகுல்காந்திக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவரை நேரில் சந்திக்க விரும்பிய ராகுல்காந்தி, அவரது வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் ராகுல் குறிப்பிட்டார். ராகுலை குழந்தையாகக் கைகளில் ஏந்திய பெருமை கொண்ட ராஜம்மா, ராகுலைப் பார்த்ததும் கண்ணீர் ததும்ப ஆரத்தழுவிக்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் ராகுல் போட்டியிட்டபோது, ராகுல் இந்தியாவில் பிறக்கவில்லை என சர்ச்சையைக் கிளப்பினார் சுப்ரமணிய சுவாமி. அப்போது பேட்டியளித்த ராஜம்மா, தான் ராகுல் பிறந்தபோது கவனித்துக்கொண்ட தகவல்களை கூறி, டெல்லி ஹோலி பேமிலி மருத்துவமனையில் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னைச் சந்தித்த ராகுலிடம், அவர் குழந்தையாக இருந்தபோது கைகளில் ஏந்தியது முதல், அப்போது ராகுலின் குடும்பத்தினர் யாரெல்லாம் மருத்துவமனையில் இருந்தார்கள் என்பது வரை அனைத்தையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார் ராஜம்மா.
மேலும், தனது குடும்பத்தினர் அனைவரையும் ராகுலுக்கு அறிமுகம் செய்துவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதோடு, பிரத்யேகமாக வீட்டில் தயாரித்த பலாப்பழ சிப்ஸ், இனிப்பு வகைகளையும் ராகுலிடம் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் ராஜம்மா. அடுத்த முறை கேரளா வரும்போதும் ராஜம்மாவை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார் ராகுல் காந்தி.
Also Read
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!