India

வாரம் ஒருமுறை ஆஜராகவேண்டும் - பா.ஜ.க வேட்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்படும் பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரக்யா சிங் தாக்கூர் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாட்டின் சிறுநீரைப் பயன்படுத்தியதால் தான் தனக்கிருந்த புற்றுநோய் குணமானது எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரே பிரக்யாவுக்கு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டதை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மஹாராஷ்டிர மாநிலத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து 9 ஆண்டுகள் ஜாமின் பெற்ற பிரக்யா சிங் தாக்கூர் பா.ஜ.க-வில் இணைந்து தற்போதைய மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

ஆனால், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு பிரக்யா சிங் சரிவர ஆஜராகாததால், வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்தர் உத்தரவிட்டுள்ளார்.