India

“தேர்தல் விதிகளை மீறிய மோடிக்கு 72 மணி நேரமல்ல; 72 ஆண்டுகள் தடைவிதிக்கலாம்” - அகிலேஷ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தன்னிடம் இருப்பதாக கூறி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்கவேண்டும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தா பானர்ஜியிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள். இன்றைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் பேரம் பேசுவதை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்கவேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசவேண்டிய பிரதமர் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருப்பதாக மிரட்டுகிறார். மோடியின் இத்தகைய மனப்பான்மைக்காக தேர்தல் ஆணையம் அவருக்கு 72 மணி நேரம் மட்டுமல்ல; 72 ஆண்டுகளுக்கு தடை விதிக்கவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.