EC - Modi
India

பிரதமர் மோடி மீதான புகார் மிஸ்ஸிங் - சர்ச்சையில் சிக்கிய தேர்தல் ஆணையம்!

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வரும் புகார்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். ஆனால், மோடி மீதான புகார் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரையின்போது விதிகளை மீறியதாக இதுவரை 426 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் ஏப்ரல் 9-ம் தேதி கொல்கத்தாவை சேர்ந்த மகேந்திர சிங் என்பவர் பிரதமர் மோடி மீது அளித்திருந்த புகார் மட்டும் இடம்பெறவில்லை.

மகாராஷ்டிரா மாநில பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, மக்கள் தங்களின் வாக்குகளை புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கும், பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய வீரர்களுக்கும் அளிக்கவேண்டும் எனப் பேசினார்.

Modi

இராணுவ வீரர்களைப் பற்றிப் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மோடியின் பேச்சு தேர்தல் விதிமீறல் என மகேந்திர சிங் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் இணையதளத்தில் இடம்பெறவில்லை.

பிரதமர் மீதான புகார் இணையதளத்தில் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், “அந்தக் குறிப்பிட்ட புகாரில் சில குழப்பங்கள் இருப்பதால் தொடர்புடைய தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் அறிக்கை அளித்ததும் பிரதமர் மீதான புகாரும் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளது.