Mayawati
India

“தோல்வி பயத்தால் பதற்றத்தில் இருக்கும் பா.ஜ.க தலைவர்கள்” - மாயாவதி விளாசல்!

உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் மீரட் நகரில் தேர்தல் பரப்புரையின்போது, மத மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி நேரம் தடை விதித்தது தேர்தல் ஆணையம். இதேபோல, மாயாவதிக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேர்தல் ஆணைய தடையை மீறி யோகி ஆதித்யநாத் மக்களைச் சந்தித்து வருவதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில், “உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதி்த்யநாத்துக்கு விதிக்கப்பட்ட 72 மணி நேர தடை முடியவில்லை. ஆனால், அவர் தடையை அப்பட்டமாக மீறியுள்ளார். கோயில்களுக்குச் செல்கிறார். தேர்தலை மனதில் வைத்து தலித் மக்களின் வீடுகளில் உணவு அருந்துகிறார்.

இவை ஊடகங்களிலும் வெளியாகின்றன. இவற்றைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதே இல்லை. பிரதமர் உட்பட பா.ஜ.க தலைவர்களுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதால், பதற்றத்தில் இருக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார் மாயாவதி.