nirav modi
India

நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார் 

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.15,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கிலும் வைர வியாபாரி நீரவ் மோடி சிக்கியுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது லண்டனில் வாழும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்திடம் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதற்கிடையே லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு வெளிட்ட செய்தியில், லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நீரவ் மோடி வசிப்பதாக செய்தி வெளியானது. மேலும், அந்த நாளேட்டின் நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் நீரவ் மோடி சென்றார்.

இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, அவரை கைது செய்ய ண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.இந்தநிலையில் நீரவ்மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்திய அமலாக்கத்துறை உறுதி படுத்தியுள்ளது. அவர் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

அப்போது நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்தி அனுப்பி வைக்கும் கோரிக்கையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் விடுக்கும் எனத் தெரிகிறது. நீரவ் மோடியை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்கிறதா அல்லது அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்குமா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.