DMK Government

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் மாதாந்திர கட்டண உதவித்தொகை உயர்வு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழ்நாடு அரசின், 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட அறிக்கையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, "விடுதிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவினக் கட்டண உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் எனும் அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் பொருட்டு, ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகள், பழங்குடியினர் நல பள்ளி விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணாக்கர் எண்ணெய், சோப்பு, சிகைக்காய், மற்றும் சலவைத்தூள் வாங்குவதற்கு, வழங்கப்படும் பல்வகை செலவினங்களுக்கான மாதாந்திர தொகையை மாதம் ஒன்றுக்கு ரூ.50 லிருந்து ரூ.100/- ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கருக்கான பல்வகை செலவினங்களுக்கான மாதாந்திர தொகையை ரூ.75 லிருந்து ரூ.150/- ஆகவும் உயர்த்தி வழங்க நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு தொகை உயர்த்தி வழங்கப்படுவதால் இத்துறையின் கீழ் இயங்கும் 318 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், மற்றும் 1374 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் 1,25,295 மாணாக்கர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு தோரயமாக ரூ. 6,67,32,250/- கூடுதல் செலவினம் ஏற்படும்.

Also Read: “கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கருதியே இந்த முடிவு” : அமைச்சர் பொன்முடி பேட்டி!