DMK

உதயநிதி ஸ்டாலின், சமரசமற்ற தமிழ் சமரின் தொடர்ச்சி!

இந்தியாவில் சுமார் 99% அரசியல்வாதிகள், சனாதனத்தை பற்றி பேசுவதற்கே தயங்கும் காலத்தில், கடந்த செப்டம்பர் 2 ஆம் நாள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதன தர்மத்தை ஒழிப்பதன் தேவை குறித்து எந்தத் தயக்கமுமின்றி பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

பொதுவாக, அரசியலில் இருப்போர் தம் கொள்கைரீதியிலான கருத்துகளை தீவிரமாக பொது வெளியில் பேசுவதற்கு தயக்கமடைவர் என்று மக்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தகர்த்திடும் வகையில் உதயநிதியின் அச்சமற்ற பேச்சு அமைந்தது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த பேச்சு, பாஜகவினருக்கும், ஆர்.எஸ்.எஸினருக்கும் கோபம் வரவைத்தது. உத்தரப் பிரதேசத்தின் தபஸ்வி சாவ்னி கோவிலின் தலைமை ஆசாரியான, மஹந்த பரமஹம்ச தாஸ், உதயநிதியின் தலைக்கு ரூ. 10 கோடி விலை வைத்து வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். பின், தானே உதயநிதியின் தலையை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டின் அமைச்சராக இருப்பவரின் தலை துண்டிக்கப்படும் என்று சொன்னவருக்கு எதிராக ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. ஆனால் அடிமை உணர்வு, உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி பாகுபாடு, பெண்களுக்கு எதிரான அநீதிகள் ஆகியவற்றை ஆதரிக்கும் சனாதன முறையை எதிர்த்ததற்காக உதயநிதி மேல் இந்தியாவின் பல இடங்களிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அந்த வழக்குகளும் உதயநிதி ஸ்டாலினை அச்சுறுத்திவிடவில்லை. சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வேன் எனக் கூறியிருக்கிறார்.

2019-ல் மோடியால் மதுரை AIIMS மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் வெறும் ஒற்றைக் கல்தான் இருந்தது என, 2021 தேர்தல் பிரச்சாரத்தில் கலகலக்க வைத்ததில் தொடங்கி, ஓர் அசைக்க முடியாத ஆற்றலாக வளர்ந்து, தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ்நாட்டு அரசியலில் பிடித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்திய அளவில் சாதி, மத அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமத்துவ அரசியலை முன்னெடுக்கும் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகையில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் அடிப்படையான நகர்ப்புற நடவடிக்கைகளையும் சரிவர நடத்தி வருகிறார் என மக்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இளைஞர்களின் திறமைகளையும், விளையாட்டுத் துறையையும் மேம்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டான சிலம்பத்தை Khelo India போட்டிகளில் உள்ளடக்கி, தமிழர் வரலாற்றுக்கு தொடர்ச்சியை அளித்திருக்கிறார்.

தகைசால் திராவிட தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் வரிசையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கான இடம், மக்களின் மனங்களில் ஆழப் பதிந்து வருவதை, கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவு வெளிப்படுத்துகிறது.

Also Read: "திமுக இளைஞரணி மாநாட்டில் 4 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பார்கள்” - இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் !