DMK

சட்டமன்ற குழு தலைவராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு.. அண்ணா, கலைஞர் நினவிடங்களில் மரியாதை!

நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 159 தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க பெருவெற்றி பெற்றுள்ளது. 125 தொகுதிகளைக் கைப்பற்றிய தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் 125 பேரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தி.மு.க சட்டமன்றக் குழு தலைவராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்மொழிய முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாறு சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதா அறிவிக்கப்பட்டவுடன், அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, முதலமைச்சராக பதவியேற்க உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை காலை 10 மணி அளவில், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தினை அளிக்கிறார்.

Also Read: "கொரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்” - பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!