DMK

“அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க” - தி.மு.க இளைஞரணி & மாணவரணி போராட்டம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்! அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாக  கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி நாளை மறுநாள் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக போராட்டம் நடத்த உள்ளது.

இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ இருவரும் கூட்டாக வெளியிட்டள்ள அறிக்கை வருமாறு :

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்காதே...

எங்கள் கல்வி உரிமையைப் பறிக்காதே!

அண்ணா பல்கலைகழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்று சொல்லி சிறப்பு வாய்ந்த பல்கலைகழகமான அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதா?

உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மாநில அரசிடம் இருக்கும் பல்கலைகழக/உயர் கல்வி உரிமையை இழக்க சம்மதிப்பதா?

இடஒதுக்கீட்டிற்கும், மாநில நிதி உரிமைக்கும் எதிராக செயல்படும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யாமல் இன்னும் அ.தி.மு.க அரசு வாய் பொத்தி மௌனிப்பதின் காரணம் என்ன?

அமைதியாக இருந்து துணை போவதற்கு காரணம் அடிமைத்தனமா? தமிழக பல்கலைக்கழகங்களை மத்திய அரசிடம் விற்கும் எண்ணமா?

உடனடியாக சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்! அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாக  கட்டுப்பாட்டிலேயே இறுதி வரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக போராட்டம்!

சூரப்பா அவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சூரப்பா தமிழ்நாட்டிற்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வந்தாரா? அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டின் கட்டுபாட்டிலிருந்து மத்திய பா.ஜ.க. அரசு கட்டுபாட்டிற்குள், அதன் காலடியில் விழ வைப்பதற்காக வந்தாரா என்ற கேள்வியும் சந்தேகமும் தமிழக மக்கள் மனதிலும் படிக்கும் மாணவர் மனதிலும் பல மாதங்களாகவே எழுந்து வருகிறது.  

அந்த கருத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலே அண்ணா பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தரான சூரப்பா சூர தனமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் "ஐந்தாண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தானாகவே 1500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டிக் கொள்ள முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்" என்று  ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

இந்த முடிவின்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி பங்கீடு இல்லாமல் போகும். நிதி பங்கீடு மாநில அரசு தராமல் இருந்தால் மாநில அரசின் கட்டுபாட்டில் இருந்தே அண்ணா பல்கலைக்கழகம் விலகி உயர்கல்வி உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில்-அதன் கைப்பாவையாக அண்ணா பல்கலைக்கழகம் மாறிவிடும்.  அப்படி மாறுவதால் தமிழகம் பல காலங்களாக போராடி பெற்ற 69 சதவீத  இட ஒதுக்கீடும் மாநில கல்வி மற்றும் நிதி உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும்.

இங்கு முக்கியமான கேள்வி என்னவென்றால் தமிழக அரசின் நிதி உதவி இல்லாமல் மத்திய அரசின் நிதி உதவியால் பல்கலைக்கழகத்தை நடத்திக் கொள்ள முடியுமென்று பீற்றிக் கொள்கிறாரே சூரப்பா, அது உண்மையென்று சொன்னால் ஏன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் புதுடெல்லியில் இயங்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்கள் உட்பட பல பல்கலைக்கழகங்களில் நிதி இல்லை என்று சொல்லி மாணவர்களுடைய கல்விக் கடனை வழங்காமல் இருக்கிறது மத்திய அரசு?

அது மட்டுமா? இந்த  மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களின் உதவி தொகையை ஏன் மத்திய அரசு ரத்து செய்துள்ளது, படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கடுமையாக உயர்த்தி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின  கிராமப்புற, ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்கிறது இந்த மத்திய அரசு.

மத்திய அரசிற்கு தன் கட்டுபாட்டில் ஏற்கனவே இருக்கும் பல்கலைக் கழகங்களையே நடத்த முடியாத நிலையில் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசின் கையில் இருந்து பறித்துக் கொண்டு போய் மத்திய அரசின் காலடியில் கிடத்துவதற்காக சூரப்பா தவமாய் தவமிருக்கிறார். இதை திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணியும், மாணவரணியும் ஒரு போதும் அனுமதிக்காது.  

அது மட்டுமா? தமிழக அரசு இது குறித்து அமைச்சர்கள் மற்றும் வல்லுநர்கள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழு முடிவெடுப்பதற்குள் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார் சூரப்பா. மாநில அரசின் கொள்கை முடிவு வெளியாவதற்குள்ளேயே மத்திய அரசிற்கு கடிதம் எழுதுகிறார் என்று சொன்னால் அண்ணா பல்கலைக் கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?! இல்லையெனில் சூரப்பா பா.ஜ.கவின் காலாட்படையாக, அ.தி.மு.க அரசால் கட்டுப்படுத்தப்பட முடியாத நபராக இருக்கிறாரா என்பதை தமிழக அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  

எது எப்படியிருந்தாலும்,  தமிழக மக்களின் வரிப்பணத்தால் மிகச்சிறந்த உயரத்திற்கு வந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகம் இறுதி வரை தமிழக அரசின் கட்டுபாட்டிலேயே இருக்க வேண்டும். அதை விடுத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று, படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டண சுமையை ஏற்றுவதற்காகவும், 69 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதற்காகவும் பா.ஜ.க அரசின் கைக்கூலியாக செயல்படும் சூரப்பாவை இந்த தமிழக அரசு உடனடியாக துணைவேந்தர் பதவியில் இருந்து தூக்கியெறியாவிட்டால் கழக இளைஞரணியும் மாணவரணியும் மேலும் கடுமையான போராட்டத்தில் குதிக்கும்.

வரவிருக்கும் தொடர் போராட்டத்தின் முன்னுரையாக நாளை மறுநாள் (15.10.2020) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை கழகத் தலைவர் அவர்களின் கட்டளைப்படி தி.மு.க. இளைஞரணியும், மாணவரணியும் நடத்தவிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  

களத்தில் சந்திப்போம் அடிமை அ.தி.மு.க. அரசே! களத்தில் சந்திப்போம் சூரப்பா அவர்களே!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சூரப்பா என்ன முதல்வரா? அண்ணா பல்கலையை காவி மயமாக்குவதற்கான ரகசிய கூட்டணியா? - மு.க.ஸ்டாலின் விளாசல்