DMK

“கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை களங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை உள்ளிட்ட புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்து, அதன் தலைப்பில் “விபச்சார விடுதி” என்று ஆபாச வார்த்தையை விஸ்வா.எஸ் என்ற இந்துத்வா கும்பலைச் சேர்ந்த ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இத்துடன் பெண் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை அவதூறு செய்யும் பதிவும் அதில் இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய கீழ்த்தரமான பதிவும் அதனுடைய பின்னூட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டித்துள்ளது.

அதுமட்டுமல்லாது வரும் 22ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அவதூறாக சித்தரிப்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீய செயல் கடும் கண்டனத்திற்குரியது. களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்தக் கட்சிக்குத்தானே நடந்திருக்கிறது என்று இப்போது அலட்சியப்படுத்தினால், பின்னர் ஆளும்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இதுபோன்று நடந்துவிடக்கூடும் என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஷாக் அடிப்பது - மின்சாரமா? மின்கட்டணமா?” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!