DMK

“குடிநீர் நிர்வாக மேலாண்மையில் வரலாறு காணாத பின்னடைவு ஏன்?” - கோவை மாநகர ஆணையாளருக்கு தி.மு.க MLA கேள்வி!

“சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் , குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் படும் சிரமங்கள் சம்பந்தமாக நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்?” என கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்க்கையில், "கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு 15 நாட்கள், சில இடங்களில் 20 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறைதான் மிகவும் குறைந்த அழுத்தத்துடன், சன்னமாக, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகிக்கும் அவலம் ஏற்பட்டு, வரலாறு காணாத வகையில் கடுமையான குடிநீர் பஞ்சம் அதிகரித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் நாளுக்கு நாள், மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோக அளவை நாளுக்கு நாள் குறைத்து வருவது மக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுடைய வாழ்வாதாரமாக, உயிர் நாடியாகத் திகழக்கூடிய குடிநீர் விநியோகத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

இந்த குடிநீர் விநியோகம் பிரச்சினை தொடர்பாக, கோவை மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் ஆகியோரை 11.1.2019, 21.1.2019, 4.2.2019, 28.5.2019 , 10.6.2019 , 24.6.2019, 13.8.2019, 22.10.2019, 12.11.2019 ஆகிய தேதிகளில், உடன் பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு, நேரில் சென்று சந்தித்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் குடிநீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை.

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் படும் சிரமங்கள் சம்பந்தமாக, நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்?

குடிநீர் நிர்வாக மேலாண்மையில் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட காரணம் என்ன?

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத இந்த நேரத்தில் மக்கள் யாரிடம் சென்று குடிநீர் கேட்பார்கள்?

இந்த குடிநீர் பிரச்சினை குறித்தும், அதனால் பொதுமக்கள் படும் சிரமம் குறித்தும் எவ்வித கவலையுமின்றி, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இதே மாநகரத்தில் வசித்து வருகிறார். கோவையில் உள்ள பொதுமக்களுக்கு குடிக்கக் கூட குடிநீர் கொடுக்க முடியாத அவல நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை உள்ளது.

ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறை, சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அமைப்புசாரா கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 நிதி வழங்குக” - தி.மு.க MLA வேண்டுகோள்!