DMK

“இதுதான் தண்டையார்பேட்டை மாடலா?” - ‘விளம்பர' அமைச்சர் பாண்டியராஜனுக்கு தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்!

"தண்டையார்பேட்டை மண்டலத்தில் தினம்தோறும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் உண்மைகளை மறைத்து பொய்யாக விளம்பரம் தேடுவதா?" என அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனுக்கு சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுதர்சனம் எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

தி.மு.கழகத் தலைவர் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் கொரோனா காலத்திலும் கொள்ளையடிப்பதை மட்டுமே முதல்வர் பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் தொழிலாகச் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் பொறுப்பான பதவியில் உள்ள முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

‘கொரோனா மூன்று நாளில் குறைந்துவிடும், பத்து நாளில் ஒழிந்துவிடும்’ என்று கூறிய முதல்வர், தற்போது கொரோனா எப்பொழுதுதான் ஒழியும் என்ற கேள்விக்கு ‘கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று பதில் கூறி முதலமைச்சர் தப்பிக்கப் பார்க்கிறார்.

முதல்வர்தான் இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார் என்றால், இவரது அமைச்சரவையில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டதாக தனக்குத்தானே சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார்.

26.6.2020 மற்றும் 27.06.2020 ஆகிய தேதிகளில் தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறையில் கொரோனாவை குணப்படுத்துவதில் அமைச்சர் பாண்டியராஜன் முயற்சியால் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகம் பேர் குணம் அடைந்ததாகவும், அதற்கு "தண்டையார்பேட்டை மாடல்" என்றும் ஒரு பொய்யான செய்தியைச் சிறப்புச் செய்தியாக ஒளிபரப்பினர்.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக, தனிமனித விளம்பரத்திற்காக வெளியிடப்படும் இந்த செய்தியால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

இதனால் ஏதோ தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா நோய் உடனுக்குடன் குணப்படுத்தப்படுவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உருவாக்கப் பார்க்கிறார்.

அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் பணியில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஜூன் 8-ஆம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற உடனே ஒருவாரத்திற்குள் கொரோனா முழுவதும் கட்டுப்படுத்தப்படும் என அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையை உண்மையாக்குவதற்காக பொய்யான புள்ளிவிவரத்தைத் தனியார் தொலைக்காட்சி மூலம் விளம்பரப் படுத்தி வருகிறார்.

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்

உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”

என்ற பழமொழி போல் மக்களுக்கு உண்மை நிலை என்ன என்பதை நாங்கள் தெளிவாக விளக்குகிறோம்.

மண்டலம் 4 தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை கொரோனா தொற்றினால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,835. இதில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 1,046 பேர். இறந்தவர்கள் எண்ணிக்கை 23.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தண்டையார்பேட்டை மண்டலத்தில் பொறுப்பேற்றது முதல் ஜூன் 27ஆம் தேதி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,154.

அதாவது மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூன் 8 வரை 77 நாட்களில் 2,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்புப் பார்வையாளராகப் பொறுப்பேற்ற 19 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,154 ஆகும். அதேபோல் மார்ச் 24 முதல் ஜூன் 8 வரை 23 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அதே அமைச்சர் பொறுப்பேற்ற 19 நாளில் 75 பேர் இறந்துள்ளனர்.

இதனைத்தான் மிகப்பெருமையாக "தண்டையார்பேட்டை மாடல்" என்றும், தமிழ்நாடு முழுவதும் இதனை விரிவுபடுத்தப் போவதாகவும், வீண் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். மேலும் குணமடைந்தவர்கள் அதிகமென்றும், அதுவே இவர்களின் சாதனை என்றும் விளம்பரப்படுத்துகிறார்கள்.

அது எப்படி என்றால் ஒவ்வொரு தெருவிலும் வீடுவீடாகப் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் ஒவ்வொருவரும், தினமும் கட்டாயம் இரு நபர்களைக் காய்ச்சல் இருப்பதாக மாநகராட்சிக்குக் கணக்கு கொடுக்கவேண்டும். மாநகராட்சியும், அவர்களை நோய்த் தொற்று உள்ளவர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்களே குணப்படுத்தியதாகக் கணக்கில் சேர்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

இது ஒரு வகைக் கணக்கு என்றால், மற்றொரு கணக்கு முறை இன்னும் வித்தியாசமானது.

அதாவது... கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்வதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பலர் வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள். இவர்களையும் மாநகராட்சி குணமடைந்து வீடு திரும்புவோர் பட்டியலில் சேர்த்து கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அதிகம் என்று பொய்யான புள்ளி விவரங்களைக் காட்டுகிறார்கள்.

அவ்வாறு கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு மாநகராட்சி எந்தவித நோய் குணப்படுத்தும் நடவடிக்கைகளையும் தண்டையார் பேட்டை மண்டலத்தில் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது அதனைத் தடுக்கப் போதிய நடவடிக்கை எடுக்காமலும், முகக்கவசம் வழங்குவதிலும், பணியாளர்களுக்கு உணவு வழங்குவதிலும் கிருமி நாசினி தெளிப்பதிலும், தற்காலிக பணியாளர் நியமனத்திலும், உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு செய்து ஊழலின் ஊற்றுக் கண்ணாகத் திகழும், தமிழக அரசையும் மாநகராட்சியையும், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பொதுமக்களைக் காப்பதில் அக்கறை காட்டாமல் அலட்சியமாக, நடந்து கொள்ளும், மாநகராட்சியை நிர்வகிக்க ஆற்றல் இல்லாத அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மிகவும் அறிவாளியாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக, உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதை இத்தோடு நிறுத்திக் கொண்டு, ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் தண்டையார்பேட்டை மண்டலத்தில், இனிமேலாவது கொரோனா தொற்று வருமுன் காக்க, பொதுமக்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கபசுர குடிநீர் ஆகியவற்றை வீடுவீடாக கொடுத்தும், வீதி வீதியாகக் கிருமிநாசினி தெளித்தும், பெயரளவுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தாமல், எங்கள் கழகத் தலைவர் கூறியதுபோல் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்தும் , நோய்த் தாக்கம் உள்ளவர்களை உடனே பாதுகாத்து தேவையான சிகிச்சை அளித்தும், உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முன்வர வேண்டும் என "அறிவாளி விளம்பரப் பிரியர்" அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: போலிஸ் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை: “உயிர்குடிக்கும் மாவட்டமாகும் தூத்துக்குடி?”- மு.க.ஸ்டாலின் வேதனை!